தமிழகம்

டிக்கெட் இல்லா பயணம்; 6 மாதங்களில் ரூ.35 கோடி அபராதம் வசூலிப்பு: தெற்கு ரயில்வே

செய்திப்பிரிவு

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததன் வாயிலாக கடந்த ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரூ.35.47 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் டிக்கெட், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 12, 2021 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டிக்கெட் வாங்காமல் பயணித்த பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுளது.

இதில் இன்று அக்டோபர் 12 ஆம் தேதியன்றே அதிகபட்சமாக ரூ.37 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் இல்லா பயணம், சுமைக்கூலி ஏய்ப்பு தொடர்பாக சென்னை கோட்டத்தில் மட்டும் ரூ.12.78 கோடி வசூலானது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.6.05 கோடி, பாலக்காட்டில் ரூ.5.52 கோடி, மதுரையில் ரூ.4.16 கோடி, சேலத்தில் ரூ.4.15 கோடி, திருச்சியில் ரூ.2.81 கோடி வசூலிக்கப்பட்டன.

அது மட்டுமல்லாது ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 12, 2021 வரை ரயில் நிலையங்களுக்கு மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.1.63 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT