உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதுகுறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவை கோரிமேடு ஞானதியாகு நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை ஆளுநர் தமிழிசை பார்வையிட வந்தார். அவரைத் தொகுதி எம்எல்ஏ ஏகேடி ஆறுமுகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து முகாமுக்குச் சென்ற ஆளுநர் தமிழிசை தடுப்பூசி போடும் பணியைப் பார்வையிட்டார். தடுப்பூசி போட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதன்பின் ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:
"கரோனா பரவாமல் இருக்கக் காரணம் தடுப்பூசிதான். இந்த முகாமிலும் முதல் தடுப்பூசி போட சிலர் வந்துள்ளனர். கரோனா தானாக நிற்கவில்லை. தடுப்பூசி போடாத ஒருவரால் கரோனா பரவினால் அது குற்றம். புதுச்சேரியில் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் முதல் தவணையையும், 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணையையும் போட்டுள்ளனர். மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை 18 நாடுகள் பயன்படுத்துகின்றன. 2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை நம் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மத்திய விஞ்ஞானக் கழகம் அனுமதி அளித்துள்ளது. நம் நாட்டு விஞ்ஞானிகளுக்கு என் பாராட்டுகள். விஞ்ஞானத்தில் நாம் புரட்சி செய்து வருகிறோம்.
புதுவையில் அடிப்படைக் கட்டமைப்பைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. இதற்கான கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரத்தை மேம்படுத்த வடிகால் அமைக்கும் திட்டம் உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதில் உள்ள சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளள வேண்டும். உச்ச நீதிமன்றம் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கெடு விதித்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இன்றித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. புதுவையில் இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டியல், வார்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்குப் போதிய கால அவகாசம் இல்லாததால் சட்டச் சிக்கலுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எம்எல்ஏக்கள் அனைவரும் இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சட்டச் சிக்கலைத் தீர்க்க முயன்று வருகிறோம். நல்ல தீர்ப்பு வரும் எனக் காத்திருக்கிறோம். பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. மாநிலத் தேர்தல் ஆணையரை மாற்ற அரசியல் கட்சியினர் கோரியுள்ளனர். இதற்கு ஒரு வழிமுறை உள்ளது. சட்ட விதிமுறைக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்க முடியும்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.