ஒரே ஒரு வாக்கு பெற்று ட்ரெண்டான வேட்பாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கோவை மாவட்ட பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு இடைத்தேர்தலில் கார்த்திக் என்ற வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றார். அவர் பாஜக பிரமுகர் எனத் தெரியவந்த நிலையில், இந்திய அளவில் ட்ரெண்டானார். இதனையடுத்து, அவரது தோல்வி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்ட பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு இடைத்தேர்தலில், திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், சுயேட்சையாக பாஜக பிரமுகரான கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் பலர் போட்டியிட்டார்கள். அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இதில், அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்றிருந்தார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.
சுயேட்சையாகப் போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். அவரது குடும்பத்தினர், கட்சியினர் வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கி இருக்கலாம். ஆனால், குடும்பத்தினர் கூட அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்தனர்.
இதனையடுத்து, #SingleVoteBJP என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் 4வது வார்டில் தான் வாக்கு உள்ளது என்றும், கிடைத்த ஒரு வாக்கையே வெற்றியாகக் கருதுவதாகவும் மீண்டும் தேர்தல்களை எதிர்கொள்வேன் அப்போது ஜெயித்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன். இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவதால் மன உலைச்சலில் உள்ளேன். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளேன் என்றும் வேட்பாளர் கார்த்திக் பேட்டியளித்தார்.
இதற்கிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை ஆளுநரை ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். பின்னர் அவர் அளித்தப் பேட்டியில், "ஒரே ஒரு வாக்கு பெற்ற கார்த்திக் பாஜகவில் பொறுப்பில் உள்ளவர் தான். ஆனால், அந்த நபர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சையாகவே களமிறங்கியுள்ளார். நானும் அவரிடம் பேசினேன். பாஜக தொண்டர்கள் மக்களுக்கு பணியாற்றத் தேர்தலில் களமிறங்குவதை பாஜக வரவேற்கிறது. அவரது உழைப்பு சிறப்பாக இருந்தால், அவருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட நிச்சயமாக வாய்ப்பளிக்கப்படும்" என்றார்.