கார்த்திகை தீப விழாவுக்கு பிரசித்தி பெற்ற ஆன்மிக நகர் திருவண்ணாமலை தொகுதியை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் வன ரோஜா, பாமக வேட்பாளர் எதிரொலி மணியன், காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியன் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் திமுக, அதிமுக, பாமக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக வேட்பாளர் வனரோஜா, முதலில் தொடங்கினார். அருள்மிகு அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய வனரோஜா, தனது பிரச்சாரத்தை அதே அண்ணாமலையார் முன்பு செவ்வாய்கிழமை நிறைவு செய்தார்.
அதேபோல், திமுக வேட்பாளர் அண்ணாதுரையும், தனது தேர்தல் பிரச்சாரத்தை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு தொடங்கினார். பின்னர், பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட அண்ணாதுரை, தனது பிரச்சாரத்தை அண்ணாமலையார் கோயில் தேரடி வீதி அரசு நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளி அருகே, செவ்வாய்கிழமை நிறைவு செய்தார்.
பாமக வேட்பாளர் எதிரொலி மணியனும் பல மாதங்களாக கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம் செய்தார். தேமுதிக, மதிமுக, பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள் தனக்கு கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும், தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அண்ணாமலையாரிடம் வேண்டியுள்ளனர். தி.மலை மக்கள் கூறுகையில், “திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையாரை மையம் கொண்டுதான் பிரச்சாரம் தொடங்கியும், நிறைவும் செய்துள்ளனர். தி.மலையை திமுக தக்கவைக்குமா என்பது மே 16ம் தேதி தெரியும் என்றனர்.