தமிழகம்

மாவோயிஸ்ட் நடமாட்டம் எதிரொலி: கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்பு

ம.சரவணன்

தமிழக எல்லையை அடுத்துள்ள கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் ஆயுத மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் கோவை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் அதிகரிக்கும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், பல்வேறு துறைகளுடன் இணைந்து தேர்தல் முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதில், எந்தெந்த வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் நிறைந்தவை என்பதை அடையாளம் கண்டறியும் பணி காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 2004-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 441 வாக்குப் பதிவு மையங்களும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 576 வாக்குப்பதிவு மையங்களும், 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 442 மையங்களும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டன.

பொதுவாக, முந்தைய தேர்தல்களில் ஏதேனும் வாக்குப் பதிவு மையங்களில் அசம்பாவித சம்பவங்கள், மோதல், குளறுபடிகள் போன்றவை நடந்திருந்தால் அடுத்த தேர்தலில் பதற்றம் நிறைந்த வாக்குப் பதிவு மையமாக காவல்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையமும் அறிவிக்கும். பதற்றம் நிறைந்த வாக்குப் பதிவு மையங்களில் ஏனைய வாக்குப் பதிவு மையங்களைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். மேலும், வீடியோ கேமரா மூலமாக வாக்கு மைய செயல்பாடுகள் முழுவதுமாக பதிவிடப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,892 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் 949 இடங்களில் அமைந்துள்ளன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், வால்பாறை, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டபேரவைத் தொகுதிகள் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளன. தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பது கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டது. அவ்வப்போது, அந்த பகுதியில் பாதுகாப்புப் படையுடன் ஆயுத மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால், தமிழக எல்லையான கோவை மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக எல்லையில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் இருப்பதால், எல்லையை ஒட்டியுள்ள வாக்குப் பதிவு மையங்களில் பெரும்பாலானவை பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாக அறிவிக்குமாறு காவல்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தேர்தல் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி 10 நாட்களுக்குள் நிறைவு பெற்றுவிடும். கடந்த தேர்தலைக் காட்டிலும் பதற்றமான வாக்குச்சவாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT