உள்ளாட்சித் தேர்தலை இரு முறை தள்ளிவைக்கக் காரணமான மாநிலத் தேர்தல் ஆணையர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் பதவி நீக்கம் செய்யுங்கள் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்ட வீடியோ தகவல்:
"உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால், அது சமூக நீதிக்கு எதிரானது. ஏன் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார். அதற்கு விளக்கம் தரவேண்டும்.
அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசித்தும், எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டும் உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸுக்குத் தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. வனத்துறை அதிகாரியைத் தன்னிச்சையாக நியமித்தது கிரண்பேடிதான். தாமஸ் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையர் தன்னிசையாகச் செயல்பட்டதால், இரண்டு முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தடை உத்தரவு தரப்பட்டுள்ளது. இது மாநில அரசுக்கு வெட்கக் கேடு. தேர்தல் தள்ளிவைக்கப்படக் காரணமானதற்கு பொறுப்பு ஏற்று மாநில தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தி அனுபவம் உள்ளவரை வைத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் முறையாகத் தேர்தல் நடக்கும்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். 2018-19ல் இதற்கான கோப்பை கிரண்பேடிக்கு அனுப்பினோம். அவர் ஒப்புதல் தரவில்லை. புதுச்சேரியில் 3 மாதங்களுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி தேர்தல் நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தராமல் தேர்தலை நடத்த முற்பட்டால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் தெருவில் இறங்கிப் போராடும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.