குடியாத்தம் ஒன்றியத்தில் மோர்தானா கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் பரந்தாமன் என்பவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கே.எம்.ஜி கல்லூரியில் இன்று (அக்.12) நடைபெற்றது.
இதில், மோர்தானா ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பரந்தாமன் என்பவர் 464 வாக்குகளும் சீதாராமன் என்பவர் 462 வாக்குகளும் பெற்றனர். இரண்டு வாக்குகள் பின்தங்கிய சீதாராமனுக்கு 1 தபால் ஓட்டு மூலம் கூடுதலாக 1 வாக்கு கிடைத்தது. இதன்மூலம் அவருக்கான வாக்கு 463 ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி யுவராஜ் வழங்கினார்.
அதிக வாக்குகள் வித்தியாசம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாலை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த கே.வி.சுப்பிரமணி என்பவர் 2,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குடியாத்தம் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நபராக கே.வி.சுப்பிரமணி உள்ளதாக கூறியுள்ளார்.
ராமாலை ஊராட்சியில் மொத்த வாக்குகள் 5,488 ஆகும். இதில், 4,308 வாக்குகள் பதிவான நிலையில் சுப்பிரமணி 3,249 வாக்குகளும், அவரது எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த வெங்கடேசன் என்பவர் 835 வாக்குகள், மற்றொரு வேட்பாளர் 187 வாக்குகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோர்தானா கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பரந்தாமனுக்கு வெற்றிக்கான சான்றிதழை வழங்கிய தேர்தல் அதிகாரி யுவராஜ்.