இந்த ஆட்சியில் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று (அக். 12) சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்டதோடு நில்லாமல் தற்போது 4 மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாகக் கணக்கிலெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை வந்தவுடன் முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் மருத்துவக் களப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அந்தத் துறையில் உள்ள அனைவரையும் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை கொடுத்தால் சற்றொப்ப ரூ.400 கோடி செலவிட நேரிடும்.
எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்ட உண்மையானவர்களைக் கண்டறியும் பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அப்பணி முடிந்துவிடும். முதல்வர் மருத்துவக் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதைத் தொடங்கிவைக்க இருக்கிறார்.
ஏற்கெனவே நடைபெற்ற ஆட்சியில் பணியிட மாற்றம் வாங்கிச் சென்ற மருத்துவர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுப்பது என்பது இப்போது உள்ள காலச் சூழ்நிலையில் சரியாக இருக்காது. இப்போது நடைபெறுகிற ஆட்சியில் வெளிப்படைத் தன்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 6,300 பேருக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு துறையிலேயேயும் தற்காலிகப் பணியாளர்கள் கூடுதலாகப் பணியாற்றிக் கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவுட் சோர்சிங், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி வரன்முறைப்படுத்துவது என்பது இயலாது. அவர்களைத் துறைவாரியாகக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தற்போது தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பணியாற்றுகிற தற்காலிகப் பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டொன்றுக்கு 87 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிடப்படுகிறது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.