வேட்பு மனுத்தாக்கலின்போது ஆர்.கடல்மணி 
தமிழகம்

ஒற்றை வாக்கில் கிடைத்த ஊராட்சித் தலைவர் பதவி: கட்சிக்காரரையே தோற்கடித்தார்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டத்தில் சக கட்சிக்காரரைவிட ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று திமுகவைச் சேர்ந்த நபர் ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 24 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 கிராம ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சிய மொத்தமுள்ள 14 பதவி இடங்களுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெற்றது. இதில், 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லால்குடி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமருதூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கடல்மணி 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ர.கன்னியம்மாள் 423 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார். இருவரின் வெற்றி - தோல்வியை ஒரு வாக்கு முடிவு செய்துள்ளதும், போட்டியிட்ட இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் கன்னியம்மாளின் கணவர் ரமேஷ்குமாரிடம், கடல்மணி வெற்றியை இழந்தார். இதனிடையே, ரமேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ரமேஷ்குமாரின் மனைவி கன்னியம்மாளை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் கடல்மணி.

இதேபோல், புள்ளம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கீழரசூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் 613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுகவைச் சேர்ந்த மு.கோவிந்தசாமி 553 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

SCROLL FOR NEXT