கடந்த ஆட்சியில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக, அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகராட்சி 31-வது வார்டு அருணாச்சலம் நகரில் 'ஒரு நாள் - ஒரு வார்டு' திட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (அக்.12) காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியின்போது ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை கால்வாய்கள் உள்ள அடைப்புகளைப் பார்வையிட்டு அவற்றை அகற்றவும் பல்வேறு இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
காலை 6 மணிக்கு அமைச்சர் ஆய்வுக்கு வந்த நிலையில், சற்று தாமதமாக வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வணக்கம் தெரிவித்த அமைச்சர், அவர்கள் தாமதமாக வந்ததைச் சுட்டிக்காட்டும் விதத்தில், "உங்களுக்கு முன்பே நாங்கள் வந்துவிட்டோம்" என்றார்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், "எங்களுக்கு நீண்டகாலமாக ரூ.7,500 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா பேரிடர்க் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றினோம். ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.
வீட்டு மின் இணைப்புக்குப் பணம் செலுத்தி நீண்ட நாட்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த மூதாட்டியிடம், இன்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பல இடங்களில் குடிநீர் இரு வாரங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். விரைவில் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர், தூய்மைப் பணியாளர்களிடம் எப்போது காலை சிற்றுண்டி சாப்பிடுவீர்கள் எனக் கேட்க, பணி முடிந்த பிறகு 11 மணிக்கு உணவருந்துவோம் என தெரிவித்தனர்.
அமைச்சரைச் சந்திப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காத்திருந்தனர். அவர்களிடம் பேசிய அமைச்சர், காபி கொண்டு வந்திருந்தால் குடித்திருக்கலாம் என்றார். இதையடுத்து, சிறிது நேரத்தில் வேறு பகுதியில் அமைச்சர் ஆய்வு செய்தபோது, அமைச்சரைச் சந்தித்த பெண்களில் ஒருவர் அவர் வீட்டுப் பகுதிக்கு அமைச்சர் வந்தபோது காபி வழங்கினார். அமைச்சரும் அவர் வழங்கிய காபியை வாங்கிப் பருகினார். நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரூர் நகராட்சியில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட குறைதீர்ப்புக் கூட்டங்களில் கரூர் நகராட்சியில் பல மாதங்களாக சாக்கடைக் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. தெருவிளக்குகள் எரியவில்லை என ஏராளமான புகார்கள் வந்தன.
நகராட்சியில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இவை தெருக்கள் பிரிக்கப்பட்டபோது கட்டப்பட்டவை. எனவே, சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரவும், தெருவிளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் நகராட்சியில் 11,575 தெரு விளக்குகள் உள்ளன. இவற்றில் சேதமடைந்த 3,550 தெருவிளக்குகள் கடந்த 4 மாதங்களில் மாற்றப்பட்டுள்ளன. 100 மீட்டருக்கு ஒரு தெருவிளக்கு என்ற அடிப்படையில், கரூர் நகராட்சியில் 2,300 புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
பருவமழைக்காலத்தை எதிர்நோக்கும் வகையில், 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அனல்மின் நிலையங்கள் மூலம் கடந்த ஆட்சியில் 58 சதவீத மின் உற்பத்தி செய்யப்பட்டது. தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக அனல்மின் நிலையங்கள் சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்தது.
அனல்மின் நிலையங்கள் மூலம் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது மின் உற்பத்தியை 3,500 மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 70 சதவீத மின் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2006-11 திமுக ஆட்சியில் அனல்மின் உற்பத்தி 85 சதவீதமாக இருந்தது".
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.