பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு, துப்பாக்கி முனையில் பொதுமக்களை மிரட்டிவிட்டு ஏரிக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பென்னலூரைச் சேர்ந்தவர் இந்திரா (55). இவர், நேற்று முன்தினம் காலை அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந் தார். அப்போது, 2 இளைஞர்கள், இந்திரா வின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினர். அலறல் சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது, கொள்ளையர்களில் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதனால், கொள்ளையரை துரத்தி வந்தவர்கள் அஞ்சி பின்வாங்கினர். தப்பி ஓடிய கொள்ளையர்கள், அங்கிருந்த ஏரி புதரில் மறைந்துகொண்டனர்.
ட்ரோன் மூலம் தேடுதல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சி புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதருக்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ட்ரோன் கேமரா உதவியுடன் 2 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், புதர் பகுதியில் பதுங்கி யிருந்த கொள்ளையர்களை போலீஸார் நேற்று கண்டுபிடித்து, அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் போலீஸாரை தாக்க முயன்றான். இதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் கொள்ளையரில் ஒருவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10-ம் தேதி காலை 8 மணி அளவில் இந்திரா என்பவர் பென்னலூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் இந்திராவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் திடீரென அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துள்ளார். பின்னர் இருவரும் இருங்காட்டுக்கோட்டை ஏரி அருகே உள்ள புதரில் மறைந்து தப்பித்தனர். பொதுமக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளான். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து பயந்து ஓடினர்.
இரவும் பகலும் தேடுதல் வேட்டை
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்த இடத்துக்கு போலீஸார் சென்றனர். 10 கி.மீ. சுற்றளவு கொண்ட அந்த பகுதியில் போலீஸ் படையினர் மூன்று ட்ரோன் கேமராக்களை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து தேடுதலில் போலீஸார் ஈடுபட்டனர். திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் ஒருவர் மட்டும் வெளியே வந்தார். அவரை கைது செய்தோம். அவர் பெயர் நைம் அக்தர் என தெரியவந்தது.
மேலும் சிலர் அங்கு இருப்பதாக தெரியவந்ததால் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. பகல் ஒரு மணி அள வில் மற்றொரு நபரை அங்கிருந்த தனிப்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், கத்தியால் போலீஸாரை தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அந்த நபர் உயிரிழந்தார். இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலம் பாதூர் மாவட்டத்தைச் சேர்ந்த முர்தஜா ஷேக் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கெனவே 2 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது காஞ்சிபுரம் சரக டிஜஜி சத்ய பிரியா, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உட னிருந்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையர் களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.