ஆளும்கட்சியான திமுகவின் தலையீடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக நிர்வாகிகள் விழிப்புடன் இருக்குமாறு ஓபிஎஸ், பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுக தொடங்கி 50 ஆண்டுதொடக்கவிழா வரும் 17-ம்தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொன்விழாவை சிறப்பாககொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது.
இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, கிளை, வார்டு, வட்டம் அளவிலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி,அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சிறப்பாக நடத்த வேண்டும். அப்போது, அதிமுகஆளும்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்து தமிழகத்துக்கு செய்த நன்மைகள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி, நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 74 இடங்களில் இன்று (12-ம்தேதி) நடக்கிறது. இதில் ஆளும்கட்சியான திமுகவின் தலையீடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால், அதிமுக நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் பதவி
இதற்கிடையில், மதுசூதனன் மறைவால் அதிமுக அவைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு சரியான நபரை அதிமுக தலைமை தேர்வு செய்துவிரைவில் அறிவிக்கும் என்றும்இக்கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.