தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வரின் படத்தை அரசு அதிகாரிகள் அகற்றினர். தேர்தல் பணிக்காக கண்காணிப்புக் குழுக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை 3 மணி முதல் அமலுக்கு வந்தது.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கூட்டம் நேற்றிரவு 7 மணிக்கு நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.நந்தகோபால் தலைமை வகித்தார்.
இதில், அரசுக் கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சின்னங்களை அழிக்க வேண்டும். அரசு கட்டிடங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அலுவலகங்களை பூட்டி வைக்க வேண்டும். அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை திரும்பப் பெறவேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் உள்ள தமிழக முதலமைச்சரின் படத்தை அகற்றவும் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் படத்தை மறைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாங்கப்பட்ட நவீன டிஜிட்டல் திரை கொண்ட வாகனத்தில் இருந்த முதல்வரின் படத்தை அதிகாரிகள் குழுவினர் மறைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணிக்காக ஏற்கெனவே பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் என 78 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் செலவின ஆய்வுக்குழு, மீடியா சான்றிதழ் ஆய்வுக்குழு மற்றும் அரசியல் கட்சியினரின் செலவின ஆய்வுக்குழு அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக உள்ளாட்சி தணிக்கைத் துறை அதிகாரிகள் 2 பேர் வீதம் கொண்ட தேர்தல் செலவின ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரின் நாளிதழ் விளம்பரம், உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பு மற்றும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுவினர் எடுக்கும் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய கருவூல கண்காணிப்பாளர்கள் 2 பேர் வீதம் 13 தொகுதிகளுக்கும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயன்படுத்திய அரசு வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.
மேலும், தேர்தல் அறிவிப்பு காரணமாக திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.