சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 7 வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். கடந்த நவம்பர் 20-ம் தேதி உயர் நீதிமன்ற வாயில் வழியாக வந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை சிஐஎஸ்எப் போலீஸார் சோதனை செய்தனர். அதை அருகில் இருந்த மற்றொரு வீரர், வீடியோவில் பதிவு செய்ததாக கூறி வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்னை பூக்கடை போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், தகராறில் ஈடுபட்ட 9 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த 9 வழக்கறிஞர்கள், தொழில் செய்வதற்கு தற்காலிக தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.
தமிழ்நாடு பார் கவுன்சில் விதித்த இந்த தடையை எதிர்த்து வழக்கறிஞர்கள் கே.சத்யபால், ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், ஆர்.பிரசாத், வி.ராஜராஜன், எல்.இன்பென்ட் தினேஷ், வி.கயல்விழி, ஏ.அப்துல்ரகுமான் ஆகிய 7 பேர் மட்டும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், ‘‘பார் கவுன்சில், எங்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக இடைநீக்கம் செய்துள்ளது. எனவே வழக்கறிஞர் தொழில் செய்ய எங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், நீதிபதி கே.ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று, ‘‘மனுதாரர்கள் 7 பேருக்கும் தமிழ்நாடு பார் கவுன்சில் விதித்த தடையை விலக்கிக்கொள்ள உத்தரவிட்டனர். அத்துடன் இந்த உத்தரவு உயர் நீதிமன்றத்தை நாடிய 7 பேருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இது தொடர்பாக பார் கவுன்சில் ஒருவாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டனர்.