சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தனியாக நிற்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், ஊதியூர், பங்காம்பாளையத்தில் பாஜகவில் விருப்ப மனு கொடுத்தவர்களுடன் நேர்காணல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய செயலா ளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தனியார் வங்கிகளில் விவசாயம், விவசாயம் சார்ந்த கடன் வாங்கியோரிடம் வங்கிகள் ஜப்தி நடவடிக்கை என்ற பெயரில் அத்துமீறுவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட அழகர் என்ற விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அதற்கு காரணமான வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
மார்ச் 21 முதல் ஏப்ரல் 1 வரை சட்டப்பேரவைத் தொகுதி மாநாடுகளை நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
2014 தேர்தலில் எங்களோடு இருந்த விஜயகாந்த் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் தனி யாக நிற்பதாக அறிவித்துள்ளார். அவர் தனியாக நிற்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
வாழும் கலை அமைப்பின் 35-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி யமுனை ஆற்றங்கரையில் கலாச்சார மாநாடு நடைபெற்றது. இதற்கு பசுமைத்தீர்ப்பாயம் அபராதம் விதித்தது சரியானதல்ல என்றார்.