கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதிஅப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறப்புடிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து,விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் தொடங்கி, நடந்து வருகிறது.
கடந்த 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில், ‘இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்ற வரம்பிற்குள் வராது; எனவே, வேறு நீதிமன்றத்தில் விசாரணைநடத்த வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘அதேபோல், முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இதனால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.