கட்சித் தலைவர்களின் சில தவறான தேர்தல் வியூகங்களால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
அதிமுகவின் பொன்விழாவையொட்டி, அதற்கான விழா கொண்டாட்டம் குறித்து அக்கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசிக்கின்றனர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பொன்விழாவை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காமராஜர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநகர மாவட்ட செயலர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசியதாவது:
எம்ஜிஆர் ரசிகன் அமைச்சராக இருந்தேன் என்பதில் பெருமைப்படுகிறேன். உயிர் மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன். அதிமுக கரை வேட்டியே சாகும் போதும் கூட உடலில் இருக்கும். அதிமுக ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒன்று தான். நான் காரை விட்டு இறங்கினால் சாதாரண தொண்டன்.
மக்கள், தொண்டர்களின் அன்பு, ஆசை யால் பத்தாண்டு அமைச்சராக இருந்தேன். நாக்கில் பல்லை போட்டு பேச முடியாத அளவுக்கு, யாருமே குறை சொல்லாத அமைச்சராக இருந்தவன். என்றுமே எனது நிலையை மாற்றிக்கொண்டதில்லை. கூட்டுறவுத்துறையில் பல தவறுகளை களைந்து மேம்படுத்த சிந்தித்து செயல்பட்டேன்.
என்னை பற்றி யார் என்ன சொன்னலும், கவலையில்லை. பழமையான கூட்டுறவுத்துறைக்கு அமைச்சரான பிறகு 28 விருதுகளை பெற்றுள்ளேன்.
மதுரை மாநகருக்கு ராஜூ நீ தான் இறுதி வரை மாவட்ட செயலாளர் என, ஜெயலலிதாவே கூறினார். கோபபடக் கூடாது என, எனக்கு அறிவுரை கூறி பக்குவப்படுத்தியவர் ஜெயலலிதா. கருணாநிதியையே விரல்விட்டு ஆட்டியவர்கள் எம்ஜிஆரின் தொண்டர்கள். கட்சியில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், அதனை வளர்க்கவேண்டியதும் அவசியமாகிறது.
இளைஞர்களுக்கு புதிய பதவி பொறுப்புகள் கொடுக்கவேண்டும். அதிமுகவை விட்டு ஓடியவர்களை பற்றி கவலையில்லை. இன்றைக்கு திமுகவை நிமிர்த்தி வைப்பவர்களே அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். திமுக அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பலர் அதிமுகவால் அடையளம் காணப்பட்டவர்கள் தலைமை நம்பி இந்த இயக்கமில்லை. தொண்டனை நம்பியே உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் என்றைக்கும் சோடை போகாது.
உதயநிதி எதாவது ஒரு படத்தில் தன் தாத்தா கருணாநிதியை, தந்தை ஸ்டாலினை காண்பித் துள்ளாரா? திமுக கொடியை காட்டி நடித்துள்ளாரா? எம்ஜிஆர் திமுக கொடியை அண்ணாவை காட்டி இயக்கத்தை வளர்த்தார். திமுக வில் அண்ணா படம் தற்போது உள்ளதா. கலை ஞர் படத்தையே மறைத்து விட்டனர். ஸ்டாலின், உதயநிதி படங்களே உள்ளன.
இரு பெரும் தலைவர்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்துகின்றனர். மாநகராட்சி தேர்தல் நான்கு மாதத்தில் நடத்தியே ஆக வேண்டும். பொதுத் தேர்தலில் தலைவர்களின் சில தவறான வியூகங்களால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையெனில் ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். மதுரை மக்கள் நம்மை மறக்கவில்லை. மாநகராட்சி தேர்தலில் நூற்றுக்கு, நூறு வெற்றி பெறவேண்டும். உள்ளாட்சியில் மதுரையில் நல்லாட்சி அமையபாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.