தமிழகம்

‘உங்கள் அண்ணா..’ என தினமும் கடிதம் எழுதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

எம்.சரவணன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘உங்கள் அண்ணா’ என, தினமும் கடிதம் எழுதி வருவது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரானதை தொடர்ந்து, கட்சியின் புதிய தலைவராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதுமுதல், கட்சி வளர்ச்சிக்காக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார்.

இந்திய அரசியலில், குறிப்பாக தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது புதிதல்ல. திமுக நிறுவனர் அண்ணா, கட்சித் தொண்டர்களை ‘தம்பி’ என்று அழைத்து எழுதிய கடிதங்கள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்தது. அவரைத் தொடர்ந்து திமுக தலைவரான கருணாநிதி, ‘உடன்பிறப்பே’ என்று அழைத்து எழுதிய கடிதங்கள் திமுக என்ற கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்த உதவியது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் தொண்டர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதுவது வழக்கம். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் தொண்டர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை தொடங்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த கடிதங்கள் பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘ஒரே நாடு’ இதழில் வெளியாகிறது.

அவர் தனது முதல் கடிதத்தில், ‘மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது வயதில் இளையவனான எனக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவைவளர்த்தெடுப்போம். தமிழக சட்டப்பேரவையில் 150 பாஜக எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்பதே எனது சின்ன ஆசை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்த கடிதங்களில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கதமிழக அரசு அனுமதி மறுத்த விவகாரம்,மகாகவி பாரதியார் பற்றியும், தமிழின் சிறப்புகள் பற்றியும் பிரதமர் மோடி பேசியது, நீட் தேர்வு பிரச்சினை, ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் கலந்துகொள்ளாதது, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடப்பட்டிருப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த 8-ம் தேதி வரை 23 கடிதங்களை எழுதியுள்ளார்.

தொண்டர்கள் உற்சாகம்

‘உங்கள் அண்ணா’ என அவர் கடிதம் எழுதுவது, பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“நான் எழுதும் கடிதங்களுக்கு பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு. எனக்குவரும் ஆயிரக்கணக்கான கடிதங்களே அதற்கு சாட்சி. உதவிகள் கேட்டும் பலர்கடிதம் எழுதியுள்ளனர். அவற்றை மாவட்டவாரியாக பிரித்து அனுப்பி உதவிகளை செய்யுமாறு மாவட்டத் தலைவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பல மாவட்டத் தலைவர்கள் உடனுக்குடன் தீர்வு கண்டு எனக்கு பதில் அனுப்பி வருகின்றனர்’’ என்று கடந்த 8-ம் தேதி எழுதிய கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT