தமிழகத்தில் 5-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடனிருந்தனர்.
பின்னர் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 32,017 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 5.03 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அரசு மூலம் 4.78 கோடி தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதேபோல, 3.74 கோடி தடுப்பூசி முதல் தவணையாகவும், 1.29கோடி தடுப்பூசி இரண்டாம் தவணையாகவும் போடப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் 46.08 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 96 சதவீதம் பேர்தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்தான்.
தமிழகத்தில் டெங்குவால் 3 பேர்உயிரிழந்துள்ளனர். குழந்தை களைப் பாதிக்கும் அரிய வகை நோய் குறித்து ஆய்வு செய்ய, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்கவில்லை என்று புகார் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.