தமிழகம்

வயது வரம்பு கட்டுப்பாடு எதிரொலி; ‘டெட்’ தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாது: 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகளுக்கு அடுத்த அதிர்ச்சி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக சேரலாம்.

இந்நிலையில், கடந்த அதிமுகஆட்சியில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன்முதலாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு 40, எஸ்.சி., எஸ்.டி., பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி. பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 45 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் பணிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் போராட்டம் நடத்தியதுடன், முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர `டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை தமிழகத்தில் 5 முறை இத்தேர்வு நடத்தப்பட்டு, சுமார் 1.50 லட்சம் பி.எட். பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர், 40 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றொரு போட்டித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்2020-2021-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இந்த போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால், கரோனா சூழல் காரணமாக அத்தேர்வு இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.

கடந்த 30.1.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படிதான், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நடைமுறையை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விலும் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதனால், டெட் தேர்ச்சி பெற்று,40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் ஆசிரியர் பணியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு அவர்களால் விண்ணப்பிக்க இயலாது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வயது வரம்பு விதிமுறை காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியர் கனவுநிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கிநிற்கின்றனர்.

SCROLL FOR NEXT