குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கைதானவரின் கோவை வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து சுண்ணாம்புக்கல் எனக்கூறி ஹெராயின் பொட்டலங்கள் கொண்ட சரக்கு பெட்டகங்கள் ஈரான் வழியாக குஜராத்தின் முந்திராதுறை முகத்துக்கு சமீபத்தில் கொண்டு வரப்பட்டன. அதில் ரூ.21 ஆயிரம் கோடிமதிப்புள்ள 2,988 கிலோ ஹெராயின்இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இவ்விவகாரத்தை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கோவை வட வள்ளிஅருண் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தராஜ்குமார் (56) என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, குஜராத் மாநிலம் பூஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை வந்தனர்.
வடவள்ளியில் உள்ள ராஜ்குமாரின் தாயார் சுசீலா வீட்டில் சில மணி நேரம் சோதனை நடத்தினர். என்ஐஏ ஆய்வாளர்கள் அஜய் (மும்பை)மற்றும் ரொசாரியோ (சென்னை)ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ராஜ்குமாரின் வங்கிக் கணக்குப் புத்தகம்,செல்போன், மடிகணினி, பயணம் செய்த விவரங்களுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜ்குமார் சென்னையில் உள்ள ஒரு சிமென்ட் கம்பெனியில் பொது மேலாளராக பணி செய்துள்ளார். கடந்தஇரண்டரை ஆண்டுக்குமுன்பு வடவள்ளிக்கு குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.