சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உரிய அனுமதி, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கியதாகவும், பல இடங்களில் கழிவுநீர் வழிந்தோடியதாகவும், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.
அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.
இதை விசாரித்த அமர்வு, வருவாய் நிர்வாக ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைத்து, சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் மழைநீர் தேங்கி இருப்பது, கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, அரசுக்கு கருத்துரு அனுப்பி இருப்பதாகவும், அரசு அனுமதி கிடைத்துவிட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடித்து, உரிய தீர்வு காணப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதற்கான உரிய அனுமதி மற்றும் நிதி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு தலைமைச் செயலர் தலையிட்டு, இத்திட்டத்துக்கு உரிய அனுமதி வழங்கி, உடனடியாக பணிகளைத் தொடங்கவும், வெள்ளத்தாலும், தேங்கும் கழிவுநீராலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.