தலைவர்களின் சில தவறான தேர்தல் வியூகங்களால் அதிமுக எதிர்க்கட்சியானது. அதிமுகவில் சில மாற்றங்கள் அவசியம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் பொன்விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் மாநகர் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:
நான் யாருமே குறை சொல்லாத அமைச்சராக இருந்தவன். கூட்டுறவுத் துறையில் பல தவறுகளைக் களைந்து, மேம்படுத்த செயல்பட்டேன்.
கட்சியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதும், அதை வளர்க்க வேண்டியதும் அவசியம். இளைஞர்களுக்குப் புதிய பதவி, பொறுப்புகள் கொடுக்க வேண்டும்.
தலைமையை நம்பி இந்த இயக்கம் இல்லை. தொண்டனை நம்பியே உள்ளது. இரு பெரும் தலைவர்கள் இயக்கத்தைச் சிறப்பாக வழி நடத்துகின்றனர். மாநகராட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்தியே ஆக வேண்டும். பொதுத் தேர்தலில் தலைவர்களின் சில தவறான வியூகங்களால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையெனில் ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். மதுரை மாநகராட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.