தமிழகத்தில் கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் இதுவரை மூவர் மட்டுமே டெங்குவால் இறந்துள்ளதாகவும் தமிழகசுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவுக்கு இந்த ஆண்டு இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டந்தோறும் தினமும் உறுதி செய்யப்படுகிறது.
மக்கள் தங்களது இல்லங்களைச் சுற்றி மழை நீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும்.சேலம், திருச்சி,கடலூர் போன்ற பகுதிகளில் பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை, போலியோவைப் போல் கரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும்.
இதுவரை மொத்தமாக, 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 3.74 கோடி டோஸ் முதல் தவனை தடுப்பூசியும், 1.29 கோடி டோஸ் இரண்டாம் தவனை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். உயிரிழந்தவர்களில் 4%பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களும் வேறு இணை நோய்களினால் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்துள்ளது.
ஆனாலும் போலியோவைப் போல் கரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும்.
இதுவரை, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2வது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. இது மிகவும் சவாலான சிக்கலாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இன்று 32,017 இடங்களில் 5-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பகல் 12 மணி நிலவரப்படி 7.18 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால் நாளை தடுப்பூசி மையங்கள் செயல்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.