தமிழகம்

இன்று உலக மனநல நாள்: தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவது எப்படி?- மனநல மருத்துவர் விளக்கம்

செய்திப்பிரிவு

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது. வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தொழில் பாதிப்பு, வேலையிழப்பு ஆகியவை மக்களிடையே மனநல பாதிப்புகளை உருவாக்கி யுள்ளன.

மனநல பாதிப்பு, தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்தமன நல மருத்துவர் என்.எஸ்.மோனி கூறியதாவது: இழப்பு, தோல்வி, வெறுப்பு, அவமானம், ஏமாற்றம், குற்ற உணர்வு, தன்மீது நம்பிக்கை யின்மை போன்றவை தற்கொலை எண்ணத்துக்கு காரணமாகின்றன. பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்கள் தற் கொலைக்கு தூண்டப்படுகின்றனர். மன வருத்தம், மனச்சிதைவு, போதைப்பழக்கம் மற்றும் பொருளாதார காரணங்களும் எண்ண மாற்றத்துக்கு வித்திடுகின்றன.

விரக்தியில் இருப்போர் தங்கள்மனதில் உள்ளவற்றை நம்பிக்கையான நபரிடம் பகிர்ந்துகொண் டாலே மனம் அமைதியாகிவிடும். மனக்குழப்பங்கள் வெளியேறி னால்தான் வேதனை குறையும். மூளையில் சுரக்கும் ‘செரட் டோனின்' எனும் ரசாயனம் மன மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது. தற்கொலை செய்துகொள்பவர் களுக்கு இதன் சுரப்பு குறைவாக இருந்தது ஆய்வுகளில் கண்டறி யப்பட்டது. எனவே, மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு செரட்டோனின் அளவை அதிகரிக்கசில மருந்துகளை அளிக்கும்போது அந்த எண்ணங்கள் சற்று மட்டுப் படும். ஆனால், மருந்துகள் மட்டுமே தீர்வாகாது.

தற்கொலைக்கு ஒருவர் முயற்சிக்கிறார் என்றாலே, அவர் உதவிக்காக அழுகிறார் என்று அர்த்தம். எனவே, தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். அன்பும், அரவணைப்பும், தகுந்த ஆலோசனையுமே தீர்வை அளிக்கும். மனநல பிரச்சினைகள் இருப்பவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர், மனநல மருத்துவர்களை அணுகி உரிய மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் மனம் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காண, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமான செயல்களில் ஈடுபடும் தவறான நபர்களை அணுகாமல் மனநல மருத்துவர்களை நாடுவதே சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT