சிக்கல்நாயக்கன்பேட்டை, கருப்பூர் கலம்காரி துணி ஓவியத்துக்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது.
கி.பி.17-ம் நூற்றாண்டிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை பகுதிகளில் மூலிகை வண்ணங்களால் துணிகளில் தீட்டப்படும் ஓவியமே கலம்காரி துணி ஓவியமாகும். இந்த ஓவியத்தை தற்போது கும்பகோணம் அருகே சிக்கல்நாயக்கன் பேட்டை, அரியலூர் மாவட்டம் கருப்பூர் ஆகிய கிராமங்களில் சிலர் வரைந்து வருகின்றனர்.
இங்குள்ள கைவினை கலைஞர்கள் திருவிளையாடல் புராணம், ராமாயண காவியங்கள், அரசவை காட்சிகளை துணிகளில் இயற்கை வர்ணங்களைக் கொண்டு ஓவியமாக தீட்டி வருகின்றனர். இந்த ஓவியங்கள் பல ஆண்டுகளுக்கு அப்படியே பிரதிபலிக்கும் என்பதால், மற்ற ஓவியங்களிலிருந்து கலம்காரி தனித்துவம் பெறுகிறது.
இந்த துணி ஓவியங்கள் தேர்ச் சீலைகள், தோரணங்கள், தேர்க் குடைகள் மற்றும் கோயில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. துணிகளில் கைகளால் மட்டுமே தீட்டப்படும் இந்த ஓவியத்துக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், இந்த கலம்காரி ஓவியத்துக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புவிசார் குறியீடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறியதாவது:
பண்பாடு, கலாச்சாரம், கைவினைப் பொருட்களின் உற்பத்தி, அதன் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பொருள் மீது புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பொருட்கள் உட்பட தமிழகத்தில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது சிக்கல்நாயக்கன்பேட்டை மற்றும் கருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் கலம்காரி துணி ஓவியத்துக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கும் துறையின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.