திருச்சியில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் திருக்குறள், பொது அறிவு மற்றும் முக்கிய செய்திகளை தமிழ் பேராசிரியர் ஒருவர் 8 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
திருச்சியைச் சேர்ந்தவர் எம்.ராஜா. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், லால்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக மற்றும் கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் கடந்த 8 ஆண்டுகளாக சட்டத் தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2013 முதல் அலுவலகத்தில் தினமும் ஒரு திருக்குறளுடன், அதற்குரிய தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களையும் எழுதி அறிவிப்புப் பலகையில் ஒட்டி வருகிறார்.
இதுகுறித்து ராஜா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலகத்துக்கு தினமும் பலர் பல்வேறு பிரச்சினைகளுக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை ஏற்படுத்துவதற்காக அலுவலக நாட்களில் தினம் ஒரு திருக்குறளை விளக்கத்துடன் எழுதி வருகிறேன். மேலும், அன்றைய முக்கிய செய்தித் தலைப்புகள் மற்றும் பொது அறிவு தொடர்பான விஷயங்களை ‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து எழுதி வருகிறேன். மேலும், ‘இந்து தமிழில்’ வெளியாகும் ‘பளிச் பத்து’, ‘சேதி தெரியுமா’ உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் முக்கிய விஷயங்களை எடுத்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதைப் பார்த்து பலரும் பாராட்டிச் செல்கின்றனர்.
கடந்த அக்.8-ம் தேதியுடன் 1,330 குறள்களையும் எழுதி முடித்துவிட்டேன். தொடர்ந்து இப்பணி நடைபெறும். இந்த பணிக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த கே.முரளிசங்கர் (தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி), தற்போதைய மாவட்ட முதன்மை நீதிபதி ஓய்.கிளாடு ஸ்டோன் பிலஸ்ட் தாகூர், சார்பு நீதிபதி கே.விவேகானந்தன் ஆகியோர் ஊக்கமளித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்தப் பணியை நான் பணியாற்றும் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் செய்து வருகிறேன். மேலும், கல்லூரியில் அவ்வப்போது மாணவ, மாணவிகளை புத்தக மதிப்புரை செய்ய வைப்பது, போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசுகள் பெற வைப்பது என பல்வேறு பணிகளையும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறேன் என்றார்.