அமமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், கெருகம்பாக்கம் ஊராட்சியில் திமுகவினர் - அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் கட்சித் தொண்டர்களிடையே காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், அமமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது, குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சி, அன்னை இந்திரா நகர் வாக்குச்சாவடியில் ஆளும் திமுகவினர், அமமுகவினர் மீது கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய அமமுக செயலாளர் முத்தையா, கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற (9-வது வார்டு) உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட மகாலிங்கம் உள்ளிட்ட 11 அமமுக தொண்டர்கள், பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரின் அடாவடிச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.