தமிழகம்

அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை,மகன் உயிரிழப்பு

பெ.பாரதி

அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்துள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் மகன் முத்துசாமி(47). இவரும் இவரது மகன் சங்கரும் (19) கீழப்பழுவூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து விட்டு நேற்று இரவு (அக் 09) 10.30 மணியளவில் தங்களது வீட்டுக்குச் சென்றனர்.

தங்களது வீட்டின் அருகே சென்றபோது, அங்கே அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக சங்கர் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளார்.

இதனைக் கண்ட முத்துசாமி அருகில் கிடந்த ஈரமான குச்சியை எடுத்து தட்டி காப்பாற்ற முயன்றார். அப்போது, ஈரமான குச்சியின் காரணமாக மின்சாரம் அதில் பாய்ந்து முத்துசாமியும் தூக்கிவீசப்பட்டார். இதில், இருவரும் அதேயிடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கீழப்பழுவூர் போலீஸாருக்கும், மின்சாரத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இருவரது உடல்களும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT