தமிழகம்

சத்துணவு சமையலர், உதவியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சத்துணவு திட்ட சமையலர், சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும்வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59 ஆககடந்த 2020-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு வயது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது, மீண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வுவயது குறைக்கப்படும் என்ற கருத்து நிலவியது. ஆனால், ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியதை உறுதி செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களின் ஓய்வு வயது 58 ஆகவே நீடித்து வந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதிமுதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் தற்போது பணியில் இருக்கும் 29,137 சமையலர்கள், 24,576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவார்கள்’’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில்சமூகநலத் துறை நேற்று வெளியிட்ட அரசாணை:

‘எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வயது முதிர்வு ஓய்வு 60 வயதில்வழங்கப்பட்டு வருகிறது. கடந்த1998-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு வயது 55-ல் இருந்து 58 ஆகஉயர்த்தப்பட்டது. அந்த அரசாணைப்படியே அவர்களுக்கு வயது முதிர்வு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. பேரவை விதி 110-ன் கீழ்முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணியாற்றி வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆகஉயர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு சமூகநலத் துறை இயக்குநர் பரிந்துரைத்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தியுள்ளது. இந்த அரசாணை வெளியிடப்பட்ட அக்டோபர் 8-ம் தேதி (நேற்று) முதல் உத்தரவு நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT