தமிழகம்

விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலும் ரேஷன் பொருள் விநியோகத்தை நிறுத்தக் கூடாது: உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் உத்தரவு

செய்திப்பிரிவு

விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கைவிரல் ரேகையை சரிபார்த்து அதன் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும்போது விரல் ரேகை தெளிவில்லாதது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகஉண்மையான அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படு வதை நிறுத்தக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும்என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், கூடுதலான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமே இனி வரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தில் இணைய இணைப்பு தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மறுக்கப்படாமல் தொடர்ந்து விநியோகிக்கப்பட வேண்டும்.

வயது முதிர்ந்த அல்லது மாற்றுத் திறனாளி அல்லது இதர அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வரும்போது முதல்கட்டமாக நட்பு முறையில் கனிவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றுஅவரது குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும். விரல் ரேகைபதிவுகள் சரியாக உள்ள அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. அதேபோல விரல் ரேகை தெளிவின்மை காரணமாக அது தோல்வியடையும்போதும், தடையின்றி பொருட்களை உடனே விநியோகிக்க வேண்டும்.

வயது முதிர்ந்த மாற்றுத் திறனாளியாக உள்ள அட்டைதாரர் கடைக்கு வர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக பொருள் பெற விரும்பி படிவம் பெற வந்தால் அவருக்கும் உடனடியாக பொருட்களைக் கொடுப்பதுடன், படிவத்தையும் கொடுத்தனுப்ப வேண்டும். அடுத்த முறைவிண்ணப்ப படிவத்தை நிரப்பி கடைக்காரரிடம் கொடுக்கலாம். அல்லது அவகாசம் கோரலாம்.

விரல் ரேகை சரிபார்ப்பு இல்லாமல் விநியோகம் செய்யப்படும்போது, பதிவேட்டில் பதிவு செய்து பொருள் பெற்றுச் செல்பவரின் கையொப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப காரணங்களால் ஆதார் சரிபார்க்க இணைப்பு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பல குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நீண்ட நேரம்காத்திருக்க நேருகிறது. இதை தவிர்க்க அரை மணிநேரம் வரையில் காத்திருந்தும் இணையதளத்தில் ஆதார் இணைப்பு பெற இயலாத நிலை ஏற்பட்டால், அந்த சிக்கல் சரியாகும் வரை இதர வழிமுறைகள்படி பொருட்களை விநியோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT