திருப்பூரில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களிடம் ரூ.53 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருப்பூர் மாவட்டம் படியூர் கணபதிபாளையம் அருகேயுள்ள காவலன் காட்டுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.கந்தசாமி (51). இவரும், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(53),அங்கேரிபாளையத்தை சேர்ந்தபி.பெருமாள்ராஜ்(54), நெருப்பெரிச்சலை சேர்ந்த எஸ்.சரவணன்(47) மற்றும் அவிநாசிஅருகேயுள்ள சென்னிமலைக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த பி.அசோக்குமார்(33) ஆகிய 5 பேரும் சேர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், திருப்பூர் அடுத்த காவலன் காட்டுத்தோட்டம் பகுதியில் ஏ.கே.ஏ. ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினர். தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இருவேறு திட்டங்களை அறிவித்தனர்.
அதன்படி, முதலாவது திட்டத்தில் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலுத்தினால் 8 ஈமு கோழிக்குஞ்சுகள் அல்லது 500 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்,
மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9ஆயிரம் வரை மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் போனஸ், அடுத்து விஐபி திட்டத்தில் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் செலுத்தினால் 8 ஈமு கோழிக் குஞ்சுகள் அல்லது 500 நாட்டுக்கோழிக் குஞ்சுகளை நிறுவனமே முதலீட்டாளர்கள் பெயரில் வளர்க்கும், மாதந்தோறும் ரூ.8,500 முதல் ரூ.11 ஆயிரம் வரை ஊக்கத்தொகை, போனஸ்,தங்கக்காசு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை நம்பி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளைச் சேர்ந்தோர் முதலீடுசெய்தனர். பிறகு அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் தர முடியாததால் 5 பேரும் தலைமறைவாகினர்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துங்காவி பகுதியைச் சேர்ந்த டி.முத்துக்குமார் என்பவர் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், 2012-ம் ஆண்டுபிப்ரவரி முதல் ஜூலை மாதம்வரை 22 முதலீட்டாளர்களிடம் ரூ.53 லட்சத்து 64 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 5 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் (டான்ஃபிட்) நடைபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஏ.எஸ்.ரவி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.11 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.வழக்கில் நேற்று என்.முத்துக்கிருஷ்ணன் மட்டும் ஆஜராகாத நிலையில், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.மாணிக்கராஜ் ஆஜரானார்.