தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மவுனப் புரட்சி செய்திட தயாராக உள்ளனர் என திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நெய்காரப்பட்டியில் நடந்தது.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப் படவில்லை. கொங்கு மண்டலத்தில் ஒரு தொழிற்சாலைகள் கூட நிறுவப்படவில்லை. எந்த மாவட்டத்திலும் சாலை வசதி முறையாக செய்து தரப்படவில்லை.
விலைவாசி உயர்வு இரண்டு மடங்கு உயர்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகளால் தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட மவுனப் புரட்சி செய்திட தயாராக உள்ளனர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை அணிகள் வந்தாலும், திமுக மிக பெரிய கூட்டணியை அமைத்து தேர்தல் களத்தை சந்திக்கும். வரும் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெற்று திமுக தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வர் பதவியில் அமருவார். திமுகவினர் கிராமம் கிராமமாக சென்று, திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் விளக்கி, திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வெண்ணிலாசேகர், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.