சென்னை சைதாப்பேட்டை பாலம் அருகே, தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அடையாற்றில் விடப்படுகிறது. அதன் காரணமாக ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரின் தரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
அதனடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. பின்னர் இது தொடர்பாக ஆய்வு செய்ய, சென்னை மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் சென்னை ஆறுகள் அறக்கட்டளை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோரை கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் சென்னை குடிநீர் வாரியம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு மற்றும் சென்னை குடிநீர் வாரிய வழக்கறிஞர்களிடம், கர்நாடகா மாநிலம் போன்று ஏன் ஆகாயத் தாமரை செடிகளை மின்சாரம் தயாரிக்கும் ஒரு வளமாக ஏன் கருதக்கூடாது. அவற்றிலிருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கக் கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சென்னை குடிநீர் வாரிய வழக்கறிஞர், அரசுடன் கலந்தாலோசித்து, சாத்தியக்கூறு இருந்தால், அது தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர்கள் தலையிட்டு, உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.