மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாங்களே எப்படிசுய பரிசோதனை மேற்கொள்வதுஎன்பது குறித்து வழிக்காட்டுவதற்காக அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இணைதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மருத்துவமனைகள் குழும துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, நடிகைகுஷ்பு ஆகியோர் https://apollocancercentres.com சேவையை தொடங்கி வைத்தனர். மருத்துவர்கள் டி.ராஜா, ரத்னா தேவி, பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போலோ மருத்தவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, “இந்தியாவில் 2030-ம்ஆண்டு காலகட்டத்தில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில், மார்பகப் புற்றுநோய் போன்றவை முக்கிய பங்குவகிக்கும். பெண்கள் பல்வேறுதுறையில் முன்னேற்றம் அடைந்தாலும், மார்பகப் புற்றுநோய் எப்படி கண்டறிவது என்பதை பலரும்அறிந்திருக்கவில்லை. எனவே, அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில், இதுபோன்ற இணையதள சேவை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறும்போது, “இந்தியாவில் 70 சதவீத பெண்கள் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் வருகின்றனர். அவர்கள் தொடக்க நிலையில்உரிய மருத்துவரை அணுகினால், புற்றுநோயை குணப்படுத்த முடியும்” என்றார்.
நடிகை குஷ்பு பேசும்போது, “தயக்கத்தை தவிர்த்து, மார்பக சுய பரிசோதனை செய்து அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். மார்பகப் புற்றுநோய் குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், வீட்டில் உள்ள ஆண்களுக்கும் சம பங்கு அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்” என்றார்.