சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில் இருந்து வேளச்சேரி ரயில்வே சாலைக்கு செல்லும் வகையில் தரமணி-வேளச்சேரி இணைப்பு சாலை அமைக்கும் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ரயில்வே தொடங்கியது.
சுமார் 4 கி.மீ. நீளம், 80 அடி அகலம் கொண்ட இந்த சாலை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. பாலப் பணிகள் மெத்தனமாக நடப்பதால், பெரிதும் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று சிறிய பாலம், சுரங்கப் பாதை பணிகளை ஆய்வு செய்தார். ஹசன் மௌலானா எம்எல்ஏ, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதன்மை திட்ட மேலாளர் விஎன்எஸ்.செல்லம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூறும்போது, “தரமணி முதல் வேளச்சேரி வரையிலான இணைப்பு சாலை பணி தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பணிகளை தெற்கு ரயில்வே முழுமையாக முடிக்கவில்லை.
ஒரு பகுதி சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சில நூறு மீட்டர் தூரம் கடக்க மழைநீர் வடிகால் பாலம் அமைக்கவேண்டும். அந்தப் பணி பலஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தெற்கு ரயில்வே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
ரயில்வே பணி முடிந்த பிறகு, சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்” என்றார்.