தமிழகம்

ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்தவர் கைது: சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நிறுவனம் நடத்தி வந்த பெரியராஜா என்பவர் சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்ததால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து முதன்மைச் செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’வணிக வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புலானய்வின்போது திருநெல்வேரி கோட்டத்திற்குட்பட்ட திருவா.சஞ்சிவி இன்ஃபிரோ இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் என்னும் நிறுவனம் சரக்குகளை வழங்காமல், சிமெண்ட் விற்பனை செய்ததாகப் போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில், வணிகவரி ஆணையரின் ஆணையின்படி, மாநில வரி நுண்ணறிவுப் பிரிவு திருநெல்வேலி இணை ஆணையரின் மேற்பார்வையில், போலிப் பட்டியல்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 11 வணிகர்களின் வியாபார இடங்களில், சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது சிமெண்ட் விற்பனை செய்யும் வணிகர் ரூ.8.99 கோடி ரூபாய் மதிப்பிலான விலைப் பட்டியல்களை, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த கட்டிடம் மற்றும் சாலை ஒப்பந்தப் பணிதாரர்களுக்கு அளித்து அவர்கள் போலி உள்ளீட்டு வரி மூலம் பயனடையச் செய்துள்ளது தெரியவந்தது.

பெரியராஜா என்பவர் மேற்கண்ட நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். சரக்குகளை விற்காமல் போலி ரசீதுகள் அளித்து போலியாக உள்ளீட்டு வரியைப் பயனாளிகள் துய்க்கச்செய்தது சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

திருநெல்வேலி மாவட்டக் காவல் துறையால் இன்று பெரியராஜா கைது செய்யப்பட்டு திருநெல்வேலி குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்’’.

இவ்வாறு முதன்மைச் செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT