தமிழகம்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜர் - 88 கேள்விகளுக்கு பதில் அளித்தார்

செய்திப்பிரிவு

மந்தைவெளி ஆடிட்டர் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஜெயேந்திரர் 88 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ் ணனை ஒரு கும்பல் கடந்த 2002 செப்டம்பர் 20-ம் தேதி வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில் அவர், மனைவி ஜெய, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் பல அரசு அதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ராதாகிருஷ்ணன்தான் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது.

இதையடுத்து, ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ரவிசுப்ரமணியம் மட்டும் அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போதே, அப்பு இறந்தார். கதிரவன் கொலை செய்யப்பட்டார். எஞ்சிய 9 பேர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

போலீஸ் தரப்பில் ரவிசுப்ரமணி யம் உள்ளிட்ட 81 பேர் சாட்சியம் அளித்தனர். 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 106 குற்ற ஆவணங்களில் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் மார்ச் 28-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பி.ராஜமாணிக்கம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஜெயந்திரர் உள்ளிட்ட 9 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 3-வது தளத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகினர்.

ஜெயேந்திரரை கூண்டில் ஏறி நிற்குமாறு போலீஸார் கூறினர். சைகையால் மறுப்பு தெரிவித்த ஜெயேந்திரர் நீதிபதி முன்பாக அருகில் சென்று நின்றார். பின்னர் அவருக்கு தனியாக இருக்கை போடப்பட்டு அதில் விரிப்புகள் போடப்பட்டு, அதில் ஜெயேந்திரர் அமர்ந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் எம்.வெங்கட்ராமன், கே.எஸ்.வைத்தியநாதன், சுந்தரேச அய்யர் சார்பில் வழக்கறிஞர் வி.வரதராஜன், ரகு சார்பில் வழக்கறிஞர் டி.லட்சுமணரெட்டி, மற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கே.எம்.சுப்ரமணியன், ஏ.டி.நாகராஜன் ஆஜராகினர்.

ஜெயேந்திரர் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயராஜ் அவரிடம் 88 கேள்விகள் கேட்டார். காஞ்சி மஹாபெரியவருக்கு நடத்தப்பட்ட கனகாபிஷேக விழா, காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு தங்கமுலாம் பூசியது தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் ‘தெரியும்’, ‘ஆமாம்’ என ஜெயேந்திரர் கூறினார்.

ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்டது, 100 கிலோ தங்கம், வருமான வரி சோதனை சம்பந்தமாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ‘தனக்கு எந்த தகவலும் தெரியாது’, என்றும், ‘பொய்’ என்றும் தெரிவித்தார். ஒருசில கேள்விகளின்போது, கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘தெரியாது’ என பதில் கூறினார்.

இறுதியாக, ‘இதுகுறித்து நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா?’ என்று நீதிபதி கேட்டதும், ‘இது பொய் வழக்கு. என் மீது தவறாக வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று ஜெயேந்திரர் கூறினார்.

குற்றச்சாட்டு கேள்விகள் பதிவு செய்யப்பட்டதும், அதற்கான ஆவணங்களில் ஜெயேந்திரர் கையெழுத்திட்டார். மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

விசாரணை சுமார் முக்கால் மணி நேரம் நடந்தது. பிறகு, நீதிமன்றத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு ஜெயேந்திரர் தனது ஆரஞ்சு நிற காரில் புறப்பட்டார். அப்போது வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெயேந்திரரிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களை போலீஸாரும், ஜெயேந்திரரின் உதவியாளர்களும் தள்ளி விட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

SCROLL FOR NEXT