புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பு அமைச்சருக்கு இணையானது என்றும் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மல்லாடிகிருஷ்ணாராவ். கடந்த காங்கிரஸ் அரசில் அப்போதை முதல்வர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தார். இவர் சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து விலகி என்ஆர்.காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். இவரின் சொந்த தொகுதியான ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் அவர் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால் ஏனாமில் ரங்கசாமி தோல்வி அடைந்தார்.
அதே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மாநிலங்களவை எம்பி பதவியை பெற மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். முதல்வர் ரங்கசாமியும், அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை பெற்றுத்தர முயன்றார். ஆனால் பாஜக மேலிடம் நேரடியாக தலையிட்டதால் மாநிலங்களவை எம்பி பாஜகவுக்கு சென்றது. பாஜக பொருளாளர் செல்வகணபதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மல்லாடிக்கு பதவி தர முதல்வர் திட்டமிட்டார். அதற்கான முயற்சியும் எடுத்தார். மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காத மல்லாடிகிருஷ்ணாராவுக்கு புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்து கோப்பினை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பினார்.
இதையடுத்து அக்கோப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் டெல்லி பிரதிதியாக மல்லாடி கிருஷ்ணராவ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வுத்தரவில், "புதுச்சேரி அமைச்சருக்கு இணையான பொறுப்பு இது. மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியம் தரப்படும். இவருக்கு அலுவலகம் சட்டப்பேரவை வளாகத்தில் தரப்படும். டெல்லி அரசு தங்கும் விடுதியில் கேம்ப் ஆபிஸ் தரப்படும். மத்திய அமைச்சர்கள் நடத்தும் கூட்டத்தில் புதுச்சேரி அரசு தரப்பில் பங்கேற்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.