அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்காவிட்டால் சிறை செல்லவும் தயங்கமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கரோனா பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்திபெற்ற 12 கோயில்கள் முன்பு பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை காளிகாம்பாள் கோயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி செல்வம், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அண்ணாமலை பேசியதாவது:
நவராத்திரி முதல் நாளில் கோயில்களை திறக்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு இந்துக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாஜக மதம் சார்ந்த கட்சி அல்ல. ஆனால், ஒரு மதத்தை குறிவைத்து அரசியல் செய்யும்போது கேள்விகேட்கும். மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூட திமுக அரசு அனுமதிக்கவில்லை. இதனால் தெருக்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். திரையரங்குகளில், மதுக் கடைகளில் வராத கரோனா, கோயில்களை திறப்பதால் மட்டும் வந்துவிடுமா?
இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து நாளிலும் கோயில்களை திறக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் சிறை செல்லவும் தயங்க மாட்டோம். இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.