தமிழகம்

சட்டவிரோதமாக பேசி வரும் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியதுசமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர்தொடர்ந்து பேசி வருகிறார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் சீமானை உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்ற சபேசன், தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழகத்தில் இருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவருக்கும் சீமானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசியபுலனாய்வு அமைப்பு தீவிரமாகவிசாரிக்க வேண்டும். இதன்மூலம்தமிழகத்தில் தேசவிரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும். இல்லையெனில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் தமிழகத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்படும்.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தீவிரவாத பாதைக்குசெல்ல நேரிடும். எனவே, அவரது பேச்சுகள், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, சட்ட விரோதமாக செயல்படும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு பெரும் துணையாக இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT