7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந் துரையை மத்திய அரசு ஏற்க வேண் டும் என்று நளினியின் சகோதரர் பாக்கியநாதன் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். நளினியை அவரது சகோதரர் பாக்கியநாதன் நேற்று சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தமிழக அரசு 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதி உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கையாக நாங்கள் பார்க்கிறோம். தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு நளினி நன்றி தெரிவித்தார். ஏற்கெனவே, 7 பேரின் விடுதலை அறிவிப்பில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகிவிட்டது. எனவே, 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். அரசியலாகப் பார்க்க வேண்டாம். நாங்களும் இதை அரசியலாகப் பார்க்கவில்லை.
ஆனால், இந்த வழக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்து அரசியலாக்கப்பட்டது. ஒரு பெண் தனியாக 25 ஆண்டுகள் தனது குழந்தையைப் பிரிந்து வாழ்கிறார். இதனால், நான் மற்றும் எனது குடும்பத்தினர் உறவினர்களை, நல்ல நண்பர்களை இழந்து அதிக மான அவமானங்களை சந்தித்து விட்டோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப் பாவிகள், விவரம் அறியாதவர்கள். எனவே, 7 பேரின் விடுதலையை மத்திய அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.