உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது புதுச்சேரி ஆளும் அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தனது ஆட்களுடன் வந்து வாகனத்தைக் கொண்டு ஏற்றி 4 அப்பாவி விவசாயிகளைக் கொலை செய்துள்ளார்.
இந்திய நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து மத்திய அமைச்சரின் மகன் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தியை போலீஸார் கைது செய்தனர். விவசாயிகள் கொலையை உத்தரப் பிரதேச மாநில அரசு மறைக்க முயல்கிறது. சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் முதல்வர் ஆகியோர் விவசாயிகளைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டது.
மத்தியில் மோடி தலைமையில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அந்த வழக்கை விசாரிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்ட காரணத்தால் யோகி ஆதித்யநாத் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில் வார்டுகள் பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் புகார் அளித்தபோது தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற உத்தரவிட்டது. இது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய அவமானம். இதன் மூலம் புதுச்சேரி ஆளும் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளுக்குக் கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக இட ஒதுக்கீட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையர் தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்துவிட்டதாகக் கூறித் தேர்தலை நிறுத்துவதும் புதுச்சேரி அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு, விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பொதுத் தொகுதி, மழைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், பெண்களுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குவது என்பன குறித்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு அதிகாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுகிறார்களா? என்பதைத் தட்டிக்கேட்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதனை முதல்வர் ரங்கசாமி செய்யத் தவறிவிட்டார். இனியாவது விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்து தேர்தலை நடத்த வேண்டும்.’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.