தமிழ்நாட்டின் பருவ நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு செல்லும் வகையில் 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உழவர்கள் தான் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் திருவள்ளுவர். இப்படி அச்சாணியாக விளங்கிக் கொண்டிருக்கூடிய உழவர் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் தான் நாடு சிறந்து விளங்கும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
விவசாயிகளுடைய வாழ்வாதாரம் மேம்பாடு அடையவும், பொருளாதாரம் சிறப்படையவும் எண்ணற்ற திட்டங்கள் அரசால் தீட்டப்பட்டு வந்தாலும், அவர்கள் மாறி, மாறி ஏதாவது ஒரு பிரச்சினைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், விவசாயிகள் தற்போது நெல் கொள்முதல் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஈரப்பதத்தை சுட்டிக்காட்டி நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், வட மாவட்டங்களில் நிலவும் பருவநிலையை அடிப்படையாக வைத்து 17 விழுக்காடு ஈரப்பத நெல்லுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தற்போதுள்ள பருவ நிலைக்கு 22 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே முளைக்கும் என்றும், எனவே 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றாலும் முதலில் கொள்முதல் செய்துவிட்டு பின்னர் மத்திய அரசின் அனுமதியை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கொள்முதல் செய்யாத பட்சத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றும் விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களும் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
நெல் கொள்முதலை துவக்கியுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்தால் தான் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுவே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசாங்கத்திற்கு இருக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டின் பருவ நிலையைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு செல்லும் வகையில் 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலை அதிகரிக்கவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விவசாயிகள் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.