தமிழகத்தில் வரும் 10-ம் தேதி நடைபெறும் மெகா முகாமில் காலஅவகாசம் முடிந்துள்ள 20 லட்சம்பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 முகாம்களில் 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
5-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வரும் 10-ம் தேதி 30 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிசெலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2-ம் தவணைகால அவகாசம் முடிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தடுப்பூசியைப் பொருத்தவரை, 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினால், அவை உருமாறக்கூடிய கரோனா வைரஸுக்கு எதிராக செயல்படாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான், கரோனா வைரஸுக்கு எதிராக நல்ல பலனை அளிக்கும். கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், தீவிர நோய் பாதிப்பு, உயிரிழப்பு போன்றவற்றைத் தவிர்க்க முடியும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தொற்றைமுழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
செல்போன் மூலம் தகவல் சேகரிப்பு
தமிழகத்தில் இதுவரை 4.75கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 2-ம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், 20 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அவர்களின் விபரங்களைச் சேகரிக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தவணையில் கொடுத்த விபரங்கள் அடிப்படையில், அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் உள்ள தயக்கம், பிரச்சினைகள் குறித்து கேட்கப்படும். மெகா முகாமில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.