தமிழகம்

வாகனங்களுக்கு மின்சாரம், எரிவாயு நிரப்பும் வகையில் பல எரிபொருள் விற்பனை நிலையங்களாக பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும்: இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

மின்சாரம், திரவ, இயற்கை எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்-கள் பல எரிபொருள் விற்பனை நிலையங்களாக மாற்றப்படும் என அந்நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) எஸ்.எஸ்.வி.ராமகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எரிபொருள்களை சுத்திகரிப்புசெய்வதற்காக, பானிபட் மற்றும்பாரதீப் நகரங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரும்பு, மக்காசோளம், நெல், பருத்தி ஆகியவற்றின் சக்கைகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்வது வரும் 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில், தரமான இன்ஜின்களைத் தயாரிக்குமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குதி செலவைக் குறைக்கவும், மாற்று எரிசக்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அதன்படி, மின்சார வாகனங்கள், எல்என்ஜி, பிஎன்ஜி, சிஎன்ஜிஆகிய திரவ, இயற்கை எரிவாயுவால் இயங்கக் கூடிய வாகனங்கள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-கள் பல எரிபொருள் விற்பனை மையங்களாக மாற்றப்படும்.

மத்திய அரசு நிர்ணயம்

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படு வதால், அதற்கேற்ப உள்நாட்டில் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. எனவே, சிலிண்டர் விலை உயர்வுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்பல்ல. அத்துடன், சிலிண்டருக்கான மானியத்தையும் மத்திய அரசு குறைத்து விட்டது. இவ்வாறு ராமகுமார் கூறினார். நிறுவன இயக்குநர்கள் பி.ஜெயதேவன், கே.சைலேந்திரா, தலைமைப் பொது மேலாளர் ஆர்.சிதம்பரம் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT