தமிழகம்

ஐ.ஐ.டி கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கக்கூடாது: அன்புமணி

செய்திப்பிரிவு

தனியார் மயமாக்கலுக்கும் வழிவகுக்கும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. கல்விக்கட்டண உயர்வை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) ஆண்டு கல்வி கட்டணத்தை 90,000 ரூபாயிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐ.ஐ.டி துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (என்.ஐ.டி) கட்டணத்தை 70,000 ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என போற்றப்படுபவை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் தான். தொழில்நுட்பக் கல்வி பயிலத் துடிக்கும் மாணவ, மாணவியரின் கனவு இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட வேண்டும் என்பது தான். இதற்காக 2 கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதித் தான் ஐ.ஐ.டி.க்களில் சேர முடிகிறது.

நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றாலும், பத்தாயிரத்துக்கும் குறைவான மாணவர்களால் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் நுழைய முடிகிறது.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களில் ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 150 மட்டுமே.

இவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு நடுவே ஐ.ஐ.டிக்களில் சேர மாணவர்கள் துடிப்பதற்கு காரணம் அங்கு குறைந்த கட்டணத்தில் அதிக தரமான தொழில்நுட்பக் கல்வியை பெற முடியும் என்பது தான்.

ஆனால், இந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஐ.ஐ.டிக்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை செலவிடப் படுவதாகவும், ஐ.ஐ.டி.க்களுக்கு நிதி சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர்களுக்கு செலவிடப் படும் தொகையில் பெரும்பகுதியை அவர்களிடமிருந்தே வசூலிக்கும் நோக்குடன் கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.ஐ.டி. துணைக்குழு தெரிவித்திருக்கிறது.

இந்த வாதம் கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதமாக தெரியவில்லை; கல்வி வணிகர்கள் முன்வைக்கும் வாதமாகவே தோன்றுகிறது

உயர்தொழில்நுட்பக் கல்வியின் சீரழிவுக்கும், தனியார் மயமாக்கலுக்கும் வழிவகுக்கும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. கல்விக்கட்டண உயர்வை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது.

எனவே, ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கக்கூடாது. அத்துடன் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான வினாத் தாள்களை தமிழிலும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT