குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொடியேற்றம் நடைபெற்றது. அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர். 
தமிழகம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை

செய்திப்பிரிவு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, கொடிப்பட்டம் வீதியுலா, கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு பால்,பழம், பன்னீர், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வரும் முக்கிய பாதைகள்தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தன. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பிரகார வலம் வந்தார்.

தசரா விழாவில் அக்டோபர் 7, 11, 12, 13, 14-ம் தேதிகளில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பிரகார வலம் வருவார்.

சூரசம்ஹாரம் 15-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வார். 16-ம் தேதி காலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும்.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள், தசரா குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5, 50, 100 என்ற எண்ணிக்கையில் காப்புகள் இன்று முதல் வழங்கப்படும். காப்புகளை கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து பஜார்கள், வீதிகள், வீடுகள்தோறும் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். காப்பு களையும் நிகழ்ச்சியை பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களிலேயே நடத்த வேண்டும். மேலும், அரசின் கரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT