குற்றச்செயலைத் தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறையினர் முன்னாள் ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க, காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தலைமையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, ரவுடிகள், பழைய குற்றவாளிகள் இருப்பிடம் தணிக்கையில் ஈடுபட்டதில் பலர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பழைய குற்றவாளிகளின் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சிலரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரமும் எழுதி வாங்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.பி.,யின் உத்தரவின்பேரில், முன்னாள் ரவுடியான வரிச்சியூர் செல்வம் என்பவரை கருப்பாயூரணி போலீஸார் வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறுதிமொழி (110 சிஆர்பிசி) பத்திரம் எழுதி வாங்கினர்.
இதற்குபின், ஏதேனும் அவர் சிறு குற்றச்செயலில் ஈடுபட்டாலும் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு வெளியில் ஜாமீனில் வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்படுவார் என, போலீஸார் தெரிவித்தனர்.