கள்ளக்குறிச்சி வாக்குச்சாவடிகள் தயார் எனத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாற்றுத்திறனாளிகளும், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 939 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதற்காக 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே, வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள மையங்களில் அதற்கான பணிகளைச் செய்து முடித்திட உத்தரவிட்டிருப்பதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவை முன்னிட்டுத் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட அலுவலர்கள் நேற்று இரவே அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றுவிட்டனர்.
ஆனால், அங்கு அவர்களுக்குக் குறிப்பாக பெண் அலுவலர்களுக்குக் கழிப்பறை, குளிப்பதற்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குச் சென்று, அவர்களிடம் மன்றாடி அவர்கள் வீட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.
போதாக்குறைக்கு முதல் நாள் இரவே வந்துவிட்டதால், பள்ளி, வகுப்பறைகளில் மின்விசிறி இயங்காததால், கொசுக்கடியில் இரவு முழுக்கத் தூங்க முடியாமல் அவதிப்பட்டதோடு, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் பெண் காவலர்கள் சிலர் உடை மாற்ற முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஊராட்சி செயலருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தாலும், அவர் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 3 சக்கர சைக்கிள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயம் இருக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கும் சூழலில், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குறிச்சி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளி வாக்குச்சாவடிக்குள் செல்ல அங்குள்ள சிலரின் உதவியோடுதான் சென்று வாக்களிக்கும் நிலை உருவானது. இதையடுத்து அங்கிருந்து வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் கேட்டபோது, ’’அதெல்லாம் இங்கு எதுவும் வைக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் உள்ள குறைபாடு குறித்து அறிய மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் முரளியைத் தொடர்பு கொண்டபோது, அவர் பேச முன்வரவில்லை.